search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுனாமி பாதுகாப்பு ஒத்திகை"

    தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் இன்று சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. சென்னையில் பட்டினம்பாக்கம் பகுதியில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. #Tsunamirehearsal
    சென்னை:

    தமிழக கடலோர பகுதிகளில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுனாமி ஆழிப்பேரலை கோரத்தாண்டவம் ஆடியதில் பல்லாயிரக்கணக் கானோர் பலியானார்கள்.

    இதன்பிறகு ஆண்டுதோறும் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

    சுனாமி தாக்குதல் ஏற்பட்டு 13 ஆண்டுகள் ஆகிறது. இந்த ஆண்டும் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதன்படி இன்று தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.

    தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்திய பெருங்கடல் முன் அறிவிப்பு அமைப்பு ஆகியவை பாதுகாப்பு ஒத்திகையை இணைந்து நடத்தின. தமிழக வருவாய் துறை, காவல் துறை, கடலோர பாதுகாப்பு படை, தேசிய மீட்புபடை மற்றும் உள்ளாட்சி அமைப்பினரும் இதில் பங்கேற்றனர்.



    சென்னையில் பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம், பனையூர் குப்பம் ஆகிய 2 இடங்களில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

    இதற்காக 6 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அனைவரும் இன்று காலையிலேயே இந்த இடங்களில் திரண்டனர். பின்னர் 9.30 மணி அளவில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது.

    சுனாமி வரப்போகிறது அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள். அப்படி செல்ல முடியாதவர்களை மீட்க நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம் பயப்பட வேண்டாம் என்று ஒலி பெருக்கி மூலம் முதலில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட போலீசாரும் மற்ற துறைகளை சேர்ந்தவர்களும் மீட்பு நடவடிக்கையில் இறங்கினார்கள்.

    சீனிவாசபுரம் பகுதியில் கடலோரமாக உள்ள குடியிருப்புகளுக்குள் அதிரடியாக புகுந்த மீட்பு குழுவினர் வயதானவர்களையும், நடக்க முடியாதவர்களையும் குண்டுகட்டாக வெளியில் தூக்கி சென்றனர்.

    பின்னர் வீடுகளில் கட்டப்பட்டிருந்த ஆட்டு குட்டிகளையும் காப்பாற்றி வெளியில் கொண்டு சென்றனர்.

    மீட்கப்பட்ட பொதுமக்களை அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சில் ஏற்றி அவர்களுக்கு முதல் உதவி செய்வது போன்று ஒத்திகை நடத்தப்பட்டது. பின்னர் அருகில் உள்ள மண்டபம் ஒன்றில் அவர்கள் கொண்டு விடப்பட்டனர். இதே போல கடலுக்குள் தத்தளித்தவர்களை மீட்பது போன்றும் ஒத்திகை நடத்தப்பட்டது. சீனிவாசபுரம் பகுதியில் நடந்த இன்றைய ஒத்திகையில் சுமார் 50 பேர் ஈடுபட்டிருந்தனர்.

    பக்கத்து மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சீபுரம் பகுதிகளிலும் அந்த மாவட்ட கலெக்டர்களின் மேற்பார்வையில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

    மாமல்லபுரத்திலும் இன்று அதிகாரிகள் ஒத்திகையில் ஈடுபட்டனர். பொன்னேரியை அடுத்த பழவேற்காடு வைரவன் குப்பத்தில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி பொன்னேரி ஆர்.டி.ஓ. முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. பேரிடர் மீட்பு குழுவினர் சுனாமி எச்சரிக்கை பற்றி ஒலி பெருக்கி வைத்தும், மைக் மூலமும் அறிவித்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு பஸ்கள், வாகனங்கள் மூலம் மண்டபத்தில் தங்க வைப்பது போன்று ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதில் நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத்துறை பொது சுகாதாரத்துறை, மீன வளத்துறை, வருவாய்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பாதுகாப்பு ஏற்பாடு கள் குறித்து விளக்கம் அளித்தனர். இதில் பொன்னேரி தாசில்தார் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திர பாபு, வேதநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதே போல் கும்மிடிப்பூண்டி அருகே ஒபசமுத்திரம் பகுதியில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

    கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகப்பட்டினம், வேளாங்கன்னி, ராமேஸ்வரம், கடலூர் உள்ளிட்ட கடலோர பகுதிகள் அனைத்திலும் இன்று பாதுகாப்பு ஒத்திகை தத்ரூபமாக நடத்தி முடிக்கப்பட்டது. #Tsunamirehearsal

    ×